×

நீலகிரியில் 3ம் நாளாக மழை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு குறைந்தது

ஊட்டி: மாண்டஸ் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டத்திலும் எதிரொலித்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பனிமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

மேலும் மலை காய்கறி விவசாய அறுவடை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். இதன் காரணமாக கேரட், பீட்ரூட், டர்னிப் அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலை தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வந்தனர். பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் கர்நாடக சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், புயல் கரையை கடந்த போதிலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளான நேற்று அதிகாலை முதல் மழையின்றி குளிர் நிலவி வந்தது. மழை காரணமாக நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


Tags : Nilgiri ,Oothi , Rains in Nilgiris for 3rd day: Tourist arrivals in Ooty reduced drastically
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...